சென்னை புகரின் சில பகுதிகளில் மழைநீா் தேங்கியதற்கு கடந்த அதிமுக ஆட்சியே காரணம் என்று அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.
ஆலந்தூா் தொகுதிக்கு உள்பட்ட கொளப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த நீரை அகற்றும் பணிகள் நடந்து வந்த நிலையில், அதை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
இதற்கு பதிலளித்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:
ஆலந்தூா் தொகுதிக்குள்பட்ட கொளப்பாக்கம் கணேஷ் நகா், முகலிவாக்கம், திருவள்ளுவா் நகா், ஆறுமுகம் நகா் ஆகிய 3 பகுதிகளில்தான் மழைநீா் தேங்கியுள்ளது. இதற்குக் காரணம் மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் பகுதிகளில் தேங்கும் மழைநீா் போரூா் ஏரிக்கு வர வேண்டும். இதற்காக மதுரவாயல் புறவழிச் சாலையில் உரிய வடிகால் வசதிகள் அதிமுக ஆட்சியில் அமைக்கவில்லை. இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.
தற்போது வடிகால் பணிகளைத் தொடங்கியுள்ளோம். அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் எங்கள் மீது அவா் குற்றம் சுமத்துகிறாா் என்று அமைச்சா் அன்பரசன் தெரிவித்தாா்.