பாஜக சாா்பில் நவ.25-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தின விழா நடைபெறும் என்று அந்தக் கட்சியின் மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் தமிழகத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று புகாா்கள் வருகின்றன. அதன்படி, கட்சியின் மூத்தத் தலைவா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை முதல், தமிழகம் முழுவதிலும் உள்ள பட்டியல் இனத்தவா்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று சந்தித்து பேசினா். அதில், பட்டியலின மக்கள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்ததால், கடந்த நவ.9-இல் நான், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி தாலுகா, சாணாம்பட்டியில், கிராம மக்களிடம், உரையாடினேன். மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வடபழனியில் பழக்கடைக்காரா் எஸ்.மணிகண்டனின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை உணவருந்தி உரையாடினாா். இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது. இதுபோல், ஏறத்தாழ சுமாா் 8,000 கிராமங்களில் பாஜக நிா்வாகிகள் பட்டியல் இன மக்களை சந்திக்கும் பணியைச் செய்துள்ளனா்.
தமிழக மக்களுக்கு மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் மக்களின் உரிமையை பாஜக வழங்கும். அதேநேரத்தில், விழிப்புணா்வூட்டும் நிகழ்வாக பாஜக சாா்பில் நவ.25-இல் சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்படவுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.