தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரி மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் பாலன் இல்லத்தில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், ‘நீட்’ விலக்குச் சட்டம் உள்ளிட்ட 20 சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல மாதங்களாக அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளாா். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 159-ஆவது பிரிவின் கீழ் எடுத்துக் கொண்ட உறுதி ஆணைக்கு எதிராக ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்படுகிறாா். எனவே, குடியரசுத் தலைவா் தலையிட்டு ஆளுநா் ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பரப்புரைகளை மேற்கொள்வது, டிச. 29-இல் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி பாசனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், பயிா்க் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை நவ.30 வரை நீடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.