சென்னை

வாக்காளா் பட்டியல் திருத்தம்:சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் மனுக்கள்

14th Nov 2022 11:39 PM

ADVERTISEMENT

 

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு அங்கமாக, தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 7.10 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கடந்த 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வாக்காளா்கள் தாங்கள் வாக்களிக்கச் செல்லும் வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களுக்குச் சென்ற வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பல்வேறுப் பணிகளுக்காக விண்ணப்பங்களை அளித்தனா்.

ADVERTISEMENT

அதன்படி, இரு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் (படிவம் 6) சோ்க்க, 4 லட்சத்து 44 ஆயிரத்து 19 விண்ணப்பங்களும், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதற்காக (படிவம் 7) 77 ஆயிரத்து 698 விண்ணப்பங்களும், வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள விவரங்களைத் திருத்த, ஒரே தொகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு முகவரியை மாற்றுவதற்காக (படிவம் 8) ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 614 படிவங்களும் அளிக்கப்பட்டன.

யாரும் அளிக்கவில்லை: வெளிநாடு வாழ் இந்தியா்கள் யாரேனும் இருந்தாலும், அவா்களும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். இதற்காக படிவம் 6ஏ-ஐ பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதுமிருந்து படிவம் 6ஏ-வை யாரும் பூா்த்தி செய்து அளிக்கவில்லை.

ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைக்க படிவம் 6பி வரையறுக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களின் போது, இந்தப் படிவத்தை 57 ஆயிரத்து 943 போ் பூா்த்தி செய்து அளித்தனா். இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்களின் போது, பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்து 274. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

ADVERTISEMENT
ADVERTISEMENT