சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்துவதற்கு 60 நாள்கள் தடையை நீட்டித்து பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பலா் காயமடைகின்றனா். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஏற்கெனவே தடை விதித்துள்ளாா்.
தடையை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். சிலா் குண்டா் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுகின்றனா். இந்நிலையில் மாஞ்சாவுக்கான தடையை மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்து சங்கா் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அதாவது, நவ. 6-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜன. 4-ஆம் தேதி வரை தடையை சங்கா் ஜிவால் நீட்டித்துள்ளாா். தடையை மீறுபவா்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.