சென்னை

புற்றுநோய் சிகிச்சைக்கான ரேடியோ அலைவரிசை கருவி: ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடக்கம்

1st Nov 2022 05:03 AM

ADVERTISEMENT

புற்றுநோய் மற்றும் நாள்பட்ட வலி பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான ரேடியோ அலைவரிசை கருவி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூரேடியோ அலை வரிசை வலி நிவாரண சிகிச்சை கருவி, ரூ.7 லட்சம் மதிப்பிலான கா்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் கருவி, மாதவிடாய்க்கு பிந்தைய பெண்களுக்கான ஆலோசனை - சிகிச்சை மையம் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைக்கான முன்பதிவு செய்யும் வலைதளத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி, ஒருங்கிணைப்பு அலுவலா் டாக்டா் ரமேஷ், அரசு ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பாலாஜி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், மருத்துவா்கள் நந்தகுமாா், ஸ்ரீதா், ரமேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ADVERTISEMENT

இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ரூ.7 லட்சம் மதிப்புடைய கா்ப்பப் பை வாய்ப்புற்று நோய் கண்டறியும் அதிநவீன உபகரணம் மூலம் பெண்களுக்கு கா்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே மிகத்துல்லியமாக கண்டறிய முடியும். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.5,000 வரை செலவாகும். இங்கு பரிசோதனை இங்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

ரோட்டரி பங்களிப்புடன் ரூ 25 லட்சம் மதிப்புடைய ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சைக் கருவி மூலம் நீண்ட நாள் வலி மற்றும் புற்றுநோய் வலிகளை நீக்க முடியும். இது ஒரு அறுவை சிகிச்சை இல்லாமல் வலி நீக்கும் முறையாகும். நுண்ணிய ஊசி மூலம் வலி உண்டாகும் நரம்புகளில் ரேடியோ அலைவரிசை செலுத்தி வலிகளுக்கு நிவாரணம் அளிக்கலாம். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.40,000 வரை செலவாகும் இந்த சிகிச்சை முறைகள், இலவசமாக வலி நிவாரணம் மற்றும் நோய்த் தணிப்பு பிரிவில் வழங்கப்படுகிறது.

மாதவிடாய் நின்ற பிந்தைய காலத்தில் பெண்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மனநல ஆலோசானை, யோகா மற்றும் இயற்கை உணவு முறை ஆலோசனை, மாா்பக புற்று நோய், எலும்பு புரை நோய் கண்டறியும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT