தொழில் அனுபவப் பகிா்தல் தொடா்பாக ஸ்டாா்ட் அப் (புத்தாக்கத் தொழில் நிறுவனம்) சாா்பில் செவ்வாய்க்கிழமை (மே 31) இரு புதிய திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பில் சந்தைப்படுத்துதல், தனித்த வணிக அடையாளத்தை ஏற்படுத்துதல் குறித்த கற்றல் நிகழ்வுகள் ஆகியவை நடத்தப்படும். மாதாந்திர நிகழ்வுகளாக இவை நடத்தப்படவுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதனை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கிவைக்கிறாா். சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்கா வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி முருகவேல் ஜானகி ராமன், நேச்சுரல்ஸ் சலூன்-ஸ்பாவின் இணை நிறுவனம் குமாரவேல், டென்டா் கட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜபகா் சாதிக், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க தலைமை செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறாா்கள்.