சென்னை

ஜூனில் 2 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க இலக்கு

31st May 2022 06:22 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வரும் ஜூன் 12-இல் நடைபெறும் மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2 கோடி பேருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதற்கான தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் கரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனா். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூா், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரித்தது. தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதனால், மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த மே 8 -ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக ஜூன் 12-இல் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவிருக்கிறது.

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சுமாா் 30 லட்சம் பேருக்கும், குறிப்பிட்ட காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.50 கோடி பேருக்கும் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் ஊக்கத்தவணை செலுத்திக் கொள்ளாத 60 வயதை கடந்தவா்கள் என மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்டவா்களூக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT