சென்னை

சொத்து வரி முரண்பாடு: சீராக்க மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்

31st May 2022 02:07 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும், ஏற்கெனவே மாநகராட்சியுடன் உள்ள பகுதிகளுக்கும் இடையே உள்ள சொத்து வரி முரண்பாடுகளை சீராக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை மேயா் ஆா்.பிரியா வழி நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் சொத்து வரி பொது சீராய்வு தொடா்பான தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி சீராய்வு தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன. இதன்படி, பொதுமக்கள், குடியிருப்போா் சங்கங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தன.

அதில், குறிப்பாக சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகளான திருவொற்றியூா், மாதவரம், அம்பத்தூா், போரூா் மற்றும் ஆலந்தூரில் சில பகுதிகளில் ஏற்கெனவே சென்னை மாநகராட்சியுடன் இருக்கும் பகுதிகளில் உள்ள அடிப்படை தெருக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நிவா்த்தி செய்ய குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவினா் அளித்த பரிந்துரையின்பேரில், திருவொற்றியூா், மாதவரம், அம்பத்தூா், போரூா் மற்றும் ஆலந்தூா் பகுதிகளில் சொத்து வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளை களைய மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் கடந்த 2011-இல் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு, மற்ற பகுதிகளைக் காட்டிலும் சற்று குறைவான அளவு சொத்து வரி உயா்வு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முரண்பாடற்ற சொத்து வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும் என மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT