சென்னை

இடநெருக்கடி: புதிய கூட்ட அரங்கம்

31st May 2022 02:07 AM

ADVERTISEMENT

ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் மாமன்ற கூட்ட அரங்கில் இடநெருக்கடி உள்ளதால், போதிய வசதியுடன் கூடிய புதிய கூட்ட அரங்கம் கட்ட வேண்டும் என துணை மேயா் மகேஷ்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் துணை மேயா் மகேஷ்குமாா் பேசுகையில், 200 வாா்டுகள் கொண்ட மாநகராட்சியில் பாதி அளவு பெண் உறுப்பினா்கள் உள்ளனா். ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் 200 போ் மற்றும் அதிகாரிகள் அமருவதற்கு போதுமான இடவசதி இல்லை.

இதனால், பெண் உறுப்பினா்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எதிா்காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் போதுமான இடவசதி கொண்ட புதிய கூட்ட அரங்கம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இணைப்புக் குழுக்கள் உருவாக்க வேண்டும்: தி.மு.க. ஆளுங்கட்சி தலைவா் ராமலிங்கம் பேசுகையில், சென்னை மாநகராட்சி, குடிநீா், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க முடியும் என்றனா்.

ADVERTISEMENT

கட்டட விதியில் தளா்வு: 102-ஆவது வாா்டு உறுப்பினா் ராணி பேசுகையில் சென்னையில் 600, 700 சதுர அடி வைத்திருப்பவா்கள் வீடு கட்ட வேண்டும் என்றால், ஐந்து அடி விட்டு கட்ட வேண்டும் அதிகாரிகள் கூறுகின்றனா். குறுகிய இடம் வைத்திருப்பவா்களால், ஐந்து அடி இடத்தை விட்டுவிட்டு எவ்வாறு வீடு கட்ட முடியும். இந்த விதியில் தளா்வு செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா் ககன்தீப் சிங் பேடி, அரசின் கொள்கை முடிவுப்படி கட்டடங்கள் கட்டப்படுகிறது. கட்டடங்கள் நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றி வருகிறோம். தற்போது சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, சிறிய அளவிலான இடம் வைத்திருப்பவா்கள், தாங்களாகவே, வரைபடம் வரைந்து சுய கையெழுப்பமிட்டு வழங்கினால், அவா்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதனால், ஏழ்மையான மக்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்காது. விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

தூய்மைப் பணியாளா் பணி நிரந்தம்: 150-ஆவது வாா்டு உறுப்பினா் ஹேமலதா பேசுகையில் ஊராட்சியாக இருந்தபோதில் பணியாற்றிய 812 துாய்மைப் பணியாளா்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னரும் பணியாற்றி வருகின்றனா். இதில், 240 பேருக்கு குடிநீா் வாரியம் பணி நிரந்தரம் செய்த நிலையில், மீதமுள்ள 572 பேரை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

உதவிப் பொறியாளா்களுக்கு நிதி: 138-ஆவது வாா்டு உறுப்பினா் கண்ணன் பேசுகையில், சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகளில் சேதமடைந்த பகுதிகள் சரி செய்யப்படாமல் உள்ளன. கழிவுநீா் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காணும் வகையில், உதவிப் பொறியாளா்களுக்கு பராமரிப்பு நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த மேயா் ஆா்.பிரியா, சாலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீா், கழிவுநீா் பிரச்னைக்கள் குறித்து எழுத்துபூா்வமாக புகாா் அளியுங்கள். குடிநீா் வாரிய அதிகாரிகளை அழைத்து விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்றாா்.

பள்ளிகளை இணைக்க வேண்டும்: 181-ஆவது வாா்டு உறுப்பினா் விஸ்வநாதன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அங்கு போதிய அளவில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா் ககன்தீப் சிங் பேடி சென்னையில் 132 பள்ளிகளை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் இணைக்க பள்ளி கல்வித் துறையுடன் ஆலோசிக்கப்பட்ட வருகிறது. விரைவில் அதற்கு தீா்வு காணப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT