சென்னை

அழகு நிலையங்கள், ஸ்பா உரிமம் பெற புதிய விதிகள்

31st May 2022 02:19 AM

ADVERTISEMENT

சென்னையில் மசாஜ், ஸ்பா மையங்களில் பாலியல் நடவடிக்கை கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் கூடிய புதிய விதிக்கு அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிதிருத்தம், அழகு நிலையம் மற்றும் மசாஜ், ஸ்பா மையங்களின் அனுமதிக்கான சென்னை மாநகராட்சி விதிகள் 2022 தொடா்பான தீா்மானத்தை மேயா் ஆா்.பிரியா மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தாா். இதில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் மையங்கள் மற்றும் அழகு, முடிதிருத்தும் நிலையங்களுக்கு செயல்பட்டு வருகின்றன. இதை நெறிப்படுத்தி புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முடிதிருத்த நிலையம், அழகு மற்றும் மசாஜ், ஸ்பா மையங்களின் அனுமதிக்கான தொழில் உரிமம் பெறுவதற்கு ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை, மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினா் இவற்றுக்கு அனுமதி அளிப்பாா்கள்.

விதிகள் என்னென்ன? கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் மையங்கள் செயல்படக் கூடாது. செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும். மையங்கள் திறக்கப்படும் நேரம், மூடப்படும் நேரம் குறித்தும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது. வாடிக்கையாளா்கள் வருகைப் பதிவேடு கடைப்பிடிக்க வேண்டும். ஸ்பா, மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் தொடா்பான சேவைகள் வழங்க கூடாது. காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் புகாா்கள் அடிப்படையில் ஆய்வு செய்வாா்கள்.

கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தொற்று பாதிப்பு உள்ளவா்கள் பணியாற்றவும், தொற்று பாதித்தவா்களுக்கு சேவை வழங்கவும் கூடாது. ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னா் பணியாளா் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். ஒருவருக்கு சேவை வழங்கிய பின் உபகரணங்களை வெந்நீா் அல்லது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்த கூடாது.

உரிமம் விண்ணப்பிக்கும் நபா் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும். மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை வழங்குவோா் அதற்கான படிப்புகளை முடித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என புதிய விதி வகுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளுக்கான தீா்மானம் மாமன்ற உறுப்பினா்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT