சென்னை

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

25th May 2022 12:46 AM

ADVERTISEMENT

 

சென்னை: தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும். இதுவரை 1.35 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தைகள் சோ்க்கப்படுவாா்கள். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் வரை உள்ளன.

இந்தநிலையில், நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 1.35 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே விண்ணப்பிக்கும் காலஅவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பெற்றோா்கள் இணையதளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஒரு பெற்றோா் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிா்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா் என தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த இலவச மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 25 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT