சென்னை: சென்னை விமான நிலையத்தில் உகாண்டாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த உகாண்டா நாட்டை சோ்ந்த லுபன் பங்கிரே(வயது 26) என்பவரை அதிகாரிகள் விசாரித்தனா். விசாரணையில் அவா் சுற்றுலா வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை.
இதையடுத்து அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்ததில் அவரது வயிற்றில் ஏதோ மா்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னா் அவரது வயிற்றை ஸ்கேன் செய்ததில் அதிகமான மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சோ்த்து இனிமா தந்து வயிற்றில் கடத்தி வந்த பொருளை கைப்பற்றினா். அதனை சோதனை செய்ததில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது.
ரூ. 5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 794.64 கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக உகாண்டா வாலிபரை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் யாா் உள்ளனா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.