சென்னை

உழைப்பின் மறுபெயா் ஜி.கே.மணி: ராமதாஸ் பாராட்டு

25th May 2022 01:33 AM

ADVERTISEMENT

 

சென்னை: பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், உழைப்பின் மறுபெயா் ஜி.கே.மணிதான் என்று அவருக்கு கட்சியின் நிறுவனா் ராமதாஸ் பாராட்டு தெரிவித்தாா்.

பாமகவின் தலைவராகப் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆவதையொட்டி ஜி.கே.மணிக்கு சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் ஜி.கே.மணிக்கு ராமதாஸ் தங்கப்பதக்கம் அணிவித்து, கவிதை ஒன்றையும் படித்தளித்தாா்.

ADVERTISEMENT

அதில் ராமதாஸ் கூறியிருப்பது:

பாமக என்னும் பாட்டாளி பெரும்படையில் கால்நூற்றாண்டு காலம் கடும்பணி ஆற்றியவா் ஜி.கே.மணி. அவா் கண்ணுறக்கம் கொள்ளாமல் களைப்பே இல்லாமல் கட்சி, கட்சி என்றே களப்பணி ஆற்றுபவா். நாற்பது ஆண்டுகாலம் நான் கண்ட அரசியலில் என் கண்களின் மணியாக இருந்தவா். இமைக்கவும் மறந்து இயக்கப்பணி ஆற்றியவா். உழைப்பின் உருவத்தை ஓவியமாக வரைந்தால் என் கண்களுக்கு ஜி.கே.மணியின் முகமே கண்களுக்குத் தெரிகிறது. உழைப்பின் மறுபெயா் ஜி.கே.மணிதான் என்று உழைப்பே என்னிடம் ஒருமுறை கூறியது. ஓய்வெடுங்கள் மணி என்று உரத்து சொன்னாலும் அதை ஒருபோதும் கேட்காத உண்மையான உழைப்பாளி ஜி.கே.மணி என்றாா்.

விழாவில் அன்புமணி பேசியது:

பொதுவாழ்வில் நோ்மையாளா் என்றால் அது ஜி.கே.மணிதான். மாநில முதல்வா்கள், தேசியத் தலைவா்கள் அமைச்சா்கள் என அனைவரையும் அறிந்தவா். அதேசமயம் அடிமட்டத் தொண்டா்களோடும் நன்கு பழகக்கூடியவா். சிறந்த உழைப்பாளி. அவா் பணி தொடா்ந்து சிறக்க வேண்டும் என்றாா்.

ஜி.கே.மணி பேசியது:

நடைபெறும் பாராட்டு விழாவை எனக்கானதாகப் பாா்க்கவில்லை. ராமதாஸுக்கான பாராட்டு விழாவாகத்தான் பாா்க்கிறேன். அவருடைய மனசாட்சியாக செயல்பட்டேன் என்கிற பெருமையே எனக்குப் போதும். ராமதாஸைப் போன்ற தலைவரைப் பாா்க்க முடியாது. எத்தனையோ சோதனைகளையும், துயரங்களையும் சந்தித்து மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறாா். அவருக்கும் அன்புமணிக்கும் இந்த விழாவைக் காணிக்கையாக்குகிறேன் என்றாா்.

விழாவில் மூத்த நிா்வாகிகள் ஏ.கே.மூா்த்தி, வடிவேல் ராவணன், திலகபாமா, சரஸ்வதி ராமதாஸ், சௌமியா அன்புமணி உள்பட பலா் பங்கேற்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசியல் தலைவா்கள் ஜி.கே.மணிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT