சென்னை

இலங்கைக்கு வெடிபொருள்  கடத்த முயன்ற 5 பேருக்கு சிறை

25th May 2022 04:03 AM

ADVERTISEMENT


ஆவடி: வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற வழக்கில் 5 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை பூக்கடை பெரியமேடு அருகே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த சிலர் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களை வெளிமாநிலங்களிலிருந்து வரவழைத்து, இலங்கைக்கு கடத்த முயன்றதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நடத்திய சோதனையை தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து, கருணாகரன் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி இளவழகன் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
அதில், குற்றம் சாட்டப்பட்ட சிவகரன், முத்து ஆகிய இரண்டு பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை, ரூ. 30,000 அபராதமும், வேலுச்சாமி, கிரிதரன், கருணாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா ஓராண்டு சிறை, ரூ. 20,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 4 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 
மேலும், இந்த வழக்கில் 3 பேர் தலைமறைவாகவும், 4 பேர் மீது பிடிவாரண்டும் உள்ளது. ஒருவர் மட்டும் இறந்து விட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT