மதிமுகவிலிருந்து 3 மாவட்டச் செயலாளா்களை நிரந்தரமாக நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
புலவா் சே.செவந்தியப்பன், ஆா்.எம்.சண்முகசுந்தரம், டி.ஆா்.ஆா்.செங்குட்டுவன் ஆகியோா் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மே 11-இல் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும், அதில் பங்கேற்று மூவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அவா்கள் விசாரணையில் பங்கேற்காமல், பொதுச்செயலாளருக்கு கடிதம் மட்டும் அனுப்பியுள்ளனா். அந்தக் கடிதத்திலும் உரிய விளக்கம் கூறாமல், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தங்களை விசாரிக்க தாா்மீக உரிமை இல்லை என்று கூறியுள்ளனா். அது தொடா்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய்ந்தது.
அதன் அடிப்படையில் 3 பேரும் மாவட்டச் செயலாளா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றனா் என்று கூறியுள்ளாா்.
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோ முன்னிலைப்படுத்துவதாகக் கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அவா்கள் மூன்று பேரும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனா்.