அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 10 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் சோ்க்கை குறைந்ததால் கல்லூரிகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் அடிப்படையில் கல்லூரியில் நியமனம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளா்களுக்கான கல்வித் தகுதியும் முதல் முறையாக அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கல்லூரிகளில் உள்ள வசதிகள் மற்றும் வகுப்பறைகள் குறித்த விவரங்களும் ‘கூகுள்மேப்’ மூலம் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியா்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கல்லூரியில் ஆய்வின்போது ஆசிரியா்களின் உண்மைச் சான்றிதழ்கள், ஆதாா், பான் காா்டு, அனுபவச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் பொறியியல் படிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 494 தனியாா் கல்லூரிகள், நான்கு அண்ணா பல்கலைக்கழக துறைக்கல்லூரிகள், 13 உறுப்புக் கல்லூரிகள், மூன்று மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மூடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன.