சென்னை

சிறந்த சேவை: 200 குடும்ப நல மருத்துவர்களுக்கு பாராட்டு

20th May 2022 04:59 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பெருந்தொற்று காலத்திலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிய குடும்ப நல மருத்துவர்கள் 200 பேர் பாஜக மருத்துவ அணி சார்பில் கெளரவிக்கப்பட்டனர். அதேபோன்று சாமானிய மக்களுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் சேவையாற்றிய இருவருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சர்வதேச குடும்ப நல மருத்துவ தினத்தையொட்டி மருத்துவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

பாஜக மாநில மருத்துவ அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே,  பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி செல்வம், பால் கனகராஜ், சுமதி வெங்கடேஷ், வி.காளிதாஸ், டாக்டர் பிரேம்குமார், டாக்டர் தனசேகர், ஸ்ரீனிவாசன், அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் நரேஷ்குமாருக்கு  ஹெட்கேவார் விருதும், டாக்டர் எஸ். சிவ சண்முகவேலுக்கு, சியாமா பிரசாத் முகர்ஜி விருதும் வழங்கப்பட்டன. 

இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான டாக்டர் சி.அன்பரசு கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று காலத்திலும் சரி; அதன் பின்னரும் சரி மருத்துவத் துறையினர் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

அவர்களது தன்னலமற்ற சேவையைப் போற்றும் விதமாகவே பாஜக மருத்துவ அணி இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் ஹெட்கேவார் மற்றும் சியாமா பிரசாத் முகர்ஜி பெயரில் சிறப்பு விருதுகளை மருத்துவர்களுக்கு அளித்துள்ளோம். இது ஒரு தொடக்கம்தான்.

இனி வரும் ஆண்டுகளில் சிறந்த சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இதேபோன்று விருதுகள் வழங்கப்படும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT