சென்னை

இணையப் பதிவேட்டில் நோயாளிகளின் விவரங்கள்: ஆஸ்திரேலிய அரசுடன் தமிழகம் ஆலோசனை

20th May 2022 04:57 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்களை மாநில அளவில் இணைய வழியே பதிவேற்றம் செய்வதற்காக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையினர் வியாழக்கிழமை கலந்தாலோசனை நடத்தினர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சாரா கிர்லியூ, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ஆஸ்திரேலிய அரசு அலுவலர்கள் அப்துல் ஏக்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான "தாய்' சிகிச்சை முறையானது ஆஸ்திரேலியாவைப் பின்பற்றியே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக நோயாளிகள் இணையப் பதிவேடு முறையை விரிவாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் ஒரு நோயாளி, தமிழகத்தின் எந்த மருத்துவமனையை நாடினாலும், அவரது உடல் நலன் குறித்த விவரங்கள் இணையவழியே பதிவேற்றப்பட்டிருக்கும். அதன் வாயிலாக அவர் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையைத் தொடர முடியும்.

இத்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையினர் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு கருத்து பரிமாற்றங்களும், ஆலோசனைகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள், உத்திகளைக் கையாளுவதுடன் நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலான மருத்துவ வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது.

அந்த வரிசையில்தான் தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். அந்நாட்டில் நோயாளிகளின் விவரங்களைச் சேமிக்கும் இணையப் பதிவேட்டு நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அது மிகவும் ஆக்கப்பூர்வமான திட்டமாகும். அதை தமிழகத்தில் செயல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT