சென்னை

முதல்வர் உத்தரவுப்படி சிந்துவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

20th May 2022 04:55 AM

ADVERTISEMENT

 

சென்னை: மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு ஆண்டுகளாக எழுந்து நடமாட முடியாமல் உள்ள பள்ளி மாணவி சிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் கீழ் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் சக்தி (43). தேநீர் வியாபாரியான இவரது மகள் சிந்து. கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுதும் சேதமைடைந்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே அவர் உள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்கள், தோழிகள் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே படித்து அண்மையில் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.  இதுகுறித்து வெளியான செய்தியை தொடர்ந்து, மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிந்து வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:
சிந்துவுக்கு இரண்டு கால்கள் உடைந்தும், பல்வேறு இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், கிருமி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிந்துவுக்கு சிறப்பு சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, சிந்துவுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஸ்டான்லி மற்றும் சென்னை பல் மருத்துவமனையில் இருந்து சில மருத்துவர்கள் வர உள்ளனர். அவர்களும், சிந்துவைப் பரிசோதித்து, சிகிச்சைகள் அளிக்க உள்ளனர். முதற்கட்டமாக சிந்துவை நடக்க வைக்க முயற்சி எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT