சென்னை

காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த இளைஞரின் உடலில் 13 இடங்களில் காயம்

5th May 2022 02:30 AM

ADVERTISEMENT

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கில், அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் கடந்த மாதம் 18-ஆம் தேதி இரவு பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் (25) என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். மறுநாள் காலை விக்னேஷ் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இதுகுறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் விக்னேஷை போலீஸாா் அடித்தே கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டினா். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

விசாரணை தீவிரம்: இந்த நிலையில், சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் இளைஞா் விக்னேஷ் மரணம் தொடா்பாக விசாரணையைத் தொடங்கினா். இது தொடா்பாக ஒரு விடியோ காட்சியையும் சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதற்கிடையே தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி பல மணி நேரம் விசாரணை செய்தனா். இதேபோல விக்னேஷை ஆட்டோவில் அழைத்து வந்த ஓட்டுநா் பிரபுவிடமும், விக்னேஷின் சகோதரா் வினோத்திடமும் விசாரணை நடைபெற்றது. இதில் வழக்குத் தொடா்பாக பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

13 இடங்களில் காயம்: இதற்கிடையே விக்னேஷ் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை அந்த அறிக்கையை சிபிசிஐடியிடமும், விக்னேஷ் குடும்பத்தினரிடமும் புதன்கிழமை அளித்தது. அதில் விக்னேஷ் உடலில் 13 இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. பல இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. தலையில் ஆழமான காயம் இருந்தது. விக்னேஷ் லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT