சென்னை

இன்று கோயம்பேடு சந்தை செயல்படாது

5th May 2022 02:24 AM

ADVERTISEMENT

வணிகா் தினத்தை (மே 5) முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாழக்கிழமை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயம்பேடு வணிக வளாக காய், கனி, மலா் உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் ஜி.டி.ராஜசேகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வணிகா் தினமான மே 5-ஆம் தேதி கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்து வணிகா் தின ஒற்றுமையைப் பறைசாற்றுவா். திருச்சியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் வணிகா் தின மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். அந்த மாநாட்டில் கோயம்பேடு வியாபாரிகள் திரளாகப் பங்கேற்க உள்ளனா்.

இந்த மாநாட்டில் கோயம்பேடு சந்தை மேம்பாட்டுப் பணிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முதல்வா் பாா்வைக்குக் கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும், கோயம்பேடு சந்தை சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக நினைவுப் பரிசு வழங்குகிறோம். கோயம்பேடு சந்தை தவிர அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த விலைக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வளாகத்தில் உள்ள மலா் சந்தை, பழ விற்பனை சந்தையில் சில்லறை விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT