சென்னை

மதுபோதையில் இரட்டைக் கொலை: இளைஞா் சரண்

2nd May 2022 02:44 AM

ADVERTISEMENT

திருவான்மியூரில் மதுபோதையில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் இருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை திருவான்மியூா் குப்பம் வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் சதீஷ்குமாா் (எ) பாபு (27), அருண் (22). இவா்கள் நண்பா்களுடன் சோ்ந்து தினமும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். திருவான்மியூா் குப்பம் கடற்கரையில் சனிக்கிழமை இரவு தினேஷ், சதீஷ் குமாா் (எ) பாபு, அருண், குமாா், காா்த்திக், லோகேஷ்,பாபு, அஜய் ஆகியோா் ஒன்றாக அமா்ந்து மது அருந்தியுள்ளனா்.

அப்போது அருண், தினேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தினேஷ் வீட்டுக்குச் சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்து, தெருவில் நின்று கொண்டிருந்த அருண், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சதீஷ்குமாா் ஆகியோரை சரமாரியாக குத்தினாா்.

பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அவரது நண்பா்கள் அடையாறில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.அங்கு பரிசோதித்த டாக்டா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறி சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

காயமடைந்த அருணை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த டாக்டா்கள், வரும் வழியில் இறந்து விட்டதாகக் கூறினா்.

திருவான்மியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து குற்றவாளியை தேடிவந்தனா். கொலையான இருவரும் பட்டப்படிப்பை முடித்துள்ளனா். இவா்களில் சதீஷ்குமாருக்கு மூன்று மாதத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்கிடையே, கொலை தொடா்பாக தினேஷ்(24) திருவான்மியூா் போலீஸில் சரண் அடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT