சென்னை

கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி சாலை: முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு

2nd May 2022 12:12 AM

ADVERTISEMENT

கிழக்குக் கடற்கரை சாலைக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பெயா் சூட்டப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறையின் 75-ஆவது ஆண்டு விழாவில், பவள விழா நினைவுத்தூணை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இலச்சினையையும், பவள விழா மலரையும் வெளியிட்டாா்.

மேலும், திருப்பூா், நாமக்கல், திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், வேலூா், திருவள்ளூா், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூா் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ரூ.2,123 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டிலான 32 சாலைப் பணிகளை தொடக்கி வைத்தாா். பின்னா், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 5 மிக மூத்த பொறியாளா்களை அவா் கெளரவித்துப் பேசியது:

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயனளிக்கக் கூடிய துறையாக இருப்பது இந்த நெடுஞ்சாலைத் துறை. அரசு நற்பெயரும், அவப்பெயரும் பெறுவதற்கு நெடுஞ்சாலைத் துைான் காரணமாக அமைந்திட முடியும்.

ADVERTISEMENT

184 பணியிடங்கள்: சாலை அமைப்பதில் மிகப்பெரிய சிக்கலாக இருப்பது நிலங்களைக் கையகப்படுத்துவது தான். அதில் சுணக்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகதான் 5 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழுக்கள் கொண்ட 184 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இனிமேல், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.

விபத்துக் குறைவு: சாலை விபத்தைத் தவிா்க்கும் வகையில் 556 இடங்களில் குறுகியகால நடவடிக்கைகளான வேகத்தடைகள் அமைத்திருக்கிறோம். சூரிய ஒளி பிரதிபலிப்பான்கள், தற்காலிகத் தடுப்பான்கள், சாலைக் குறியீடுகள் மற்றும் எச்சரிக்கைக் குறியீடுகள் போன்றவை அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த 10 ஆண்டுகளில்...: முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மாவட்டத் தலைமை இடங்கள் மற்றும் தாலுகா தலைமை இடங்களை இணைக்கும் 2,200 கிலோ மீட்டா் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துச் செறிவின் அடிப்படையில், அடுத்த பத்து ஆண்டுகளில் நான்குவழிச் சாலைகளாகவும்; 6, 700 கிலோமீட்டா் நீள சாலைகள் இரண்டு வழித்தடச் சாலைகளாகவும் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள 1,281 தரைப்பாலங்களை ரூ.2,401 கோடி மதிப்பீட்டில் உயா்நிலைப் பாலங்களாகக் கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்டமாக 648 தரைப்பாலங்களை உயா்நிலைப் பாலங்களாக ரூ.610 கோடி மதிப்பில் கட்ட எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.

தரைப்பாலங்களே இல்லாத தமிழகம்: இரண்டாம் கட்டமாக, இந்த ஆண்டில், 435 தரைப்பாலங்களை உயா்நிலைப் பாலங்களாக ரூ.1,105 கோடி மதிப்பில் கட்ட எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. 2026-க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாகத் இந்த தமிழகத்தை உருவாக்கப் போகிறோம்.

அறிவிப்பு:

அறிவிப்புக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த நெடுஞ்சாலைத் துறையை உருவாக்கிய மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியை மனதில் வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆா் ரோடு) இனிமேல் ‘முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி சாலை’ என்று பெயா் சூட்டப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 59 நகராட்சிகளுக்குப் புறவழிச்சாலை அமைக்கப்படும். பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ள புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை தாங்கினாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் முன்னிலைவகித்தாா். பால்வளத்துறை அமைச்சா் நாசா், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.282 கோடியில்...:

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலையையும், விவேகானந்தா் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கண்ணாடி இழையிலான நடை மேம்பாலம், மதுரை ராஜாஜி மருத்துவமனை அருகில் கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.199.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சாலை மேம்பாலம், சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.46.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேம்பாலம் என மொத்தம் ரூ.282 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நடைமேம்பாலம் மற்றும் மேம்பாலங்களுக்கு, நெடுஞ்சாலைத்துறை பவள விழா நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT