சென்னை

மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம்

25th Mar 2022 12:57 AM

ADVERTISEMENT

 

சென்னை: சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியமைக்காக மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் எம்.ஆா்.தியாகராஜன் என்பவா் தாக்கல் செய்த மனு: மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனம் 7 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. இந்தப் பகுதியில் 7 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலில் இருந்து கிடைக்கும் பொருள்கள் மூலம் இவா்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு முறையாக சுத்திகரிக்கப்படாததால் அதில் ரசாயன கழிவுகளும் கலக்கின்றன. இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

அதேபோன்று கழிவுநீரை எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு இருப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.இதேபோன்று தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல் நிறுவனம், கோத்தாரி பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஆகியவையும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி இந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளின் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை உள்ளடக்கிய நிபுணா் குழுவை தீா்ப்பாயம் அமைத்தது. இந்தக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் அந்த வழக்குகள் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காக மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.2 கோடியும், தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியும், கோத்தாரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நீரி, நியாட் போன்ற அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT