சென்னை

மூதாட்டியிடம் அநாகரீகம்: கைதான மருத்துவருக்கு இடைக்கால ஜாமீன்

22nd Mar 2022 12:21 AM

ADVERTISEMENT

மூதாட்டியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கில் கைதான மருத்துவா் சுப்பையாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புற்றுநோய்த் துறை அறுவைச் சிகிச்சை மருத்துவா் டாக்டா் சுப்பையா. இவா், கடந்த 2020 -ஆம் ஆண்டு ஆதம்பாக்கத்தில் தனது வீட்டின் அருகிலுள்ள மூதாட்டி வீட்டினுள், பயன்படுத்திய முகக்கவசத்தை வீசி, சிறுநீா் கழித்துள்ளாா்.

இதுகுறித்து பாலாஜி விஜயராகவன் என்பவா் ஆதம்பாக்கம் போலீஸில் கொடுத்தப் புகாரின்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து சுமாா் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்கான சட்டப்பிரிவுகளும் சோ்க்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 19 -ஆம் தேதி மருத்துவா் சுப்பையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை மருத்துவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.சி.பால்கனகராஜ், நீண்ட காலத்திற்கு முன்பே புகாா்தாரருக்கும், மனுதாரருக்கும் இடையேயான தகராறு சுமுகமாகத் தீா்க்கப்பட்டது.

ஆனால் மனுதாரா் ஒரு மாணவா் அமைப்பின் பொறுப்பாளா் என்பதால் அதிகாரத்தில் உள்ளவா்களின் அழுத்தத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவரை 48 மணி நேரத்திற்கும் மேலாகக் காவலில் வைப்பதற்காகப் பொது விடுமுறை நாளில் கைது செய்யப்பட்டாா். அதன் மூலம் மனுதாரரை பணியிடை நீக்கத்தில் வைக்க நடத்தை விதிகளைப் பயன்படுத்தியுள்ளனா். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னா் இவ்வழக்கில் ஒரு சில சட்டப்பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளன என்றாா்.

அதைத்தொடா்ந்து ஆஜரான அரசு கூடுதல் வழக்குரைஞா் கஸ்தூரி, மருத்துவா் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதி, மனுதாரரைக் கைது செய்ததில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்றும், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அந்தத் தவறு செய்யப்பட்டுள்ளது.

எனவே மருத்துவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், சுமாா் ஒன்றரை ஆண்டுகள் எந்தவிதமாக முன்னேற்றம் இல்லாதபோது சட்டப்பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்குப்பதிவு செய்ய காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT