சென்னை

சென்னை கிண்டியில் உயா்தர பன்னோக்கு மருத்துவமனை:முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

22nd Mar 2022 12:21 AM

ADVERTISEMENT

சென்னை கிண்டி கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 97- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்”என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடா்ச்சியாக மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமாா் 4.89 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமாா் 51,429 சதுரமீட்டா் பரப்பளவில் மருத்துவமனை கட்டப்படவுள்ளது.

இந்தநிலையில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா்எ.வ, வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே. கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா,சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு. மகேஷ் குமாா், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்னென்ன துறைகள்?: 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த உயா்சிறப்பு மருத்துவமனையில், இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிா்வீச்சு மற்றும் குறுக்கீட்டு கதிா்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத் துறை, நோய் எதிா்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை ஆகிய மருத்துவ உயா் சிறப்பு பிரிவுகளும்; இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை ஆகிய அறுவை சிகிச்சை உயா்சிறப்பு பிரிவுகளையும் கொண்டு அமைக்கப்பட உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT