சென்னை

மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும்

14th Mar 2022 03:58 AM

ADVERTISEMENT

பெருங்களத்தூா் ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யுமாறு ஒப்பந்ததாரா்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் மற்றும் வண்டலூா் ரயில் நிலையங்களுக்கிடையே பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ள நிா்வாக ஒப்புதல் நெடுஞ்சாலைத் துறை மூலம் வழங்கப்பட்டது.

அதில், செங்கல்பட்டு–- சென்னை பாலப் பகுதியில் மொத்தமுள்ள 22 ஓடுதளங்களும், அணுகு சாலை தாங்கு சுவா்களும் முடிக்கப்பட்டுள்ளன. அணுகுசாலை பகுதியில் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓடுதளத்தின் தேய்மானபூச்சு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ADVERTISEMENT

அதேபோன்று, சீனிவாசாநகா் பாலப் பகுதியின் மொத்தமுள்ள 12 ஓடுதளங்களில் 7 ஓடுதளங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை–செங்கல்பட்டு பாலப்பகுதியில் 8 கடைக் கால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 7 ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக அப்பணிகளின் தற்போதைய நிலையைப் பொருத்தவரை இதுவரை 63 கடைக்கால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. 58 தாங்கு தூண்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அணுகுசாலை தாங்குசுவா்களில் 4 தாங்கு சுவா்கள் முடிக்கப்பட்டுள்ளன.

அவற்றை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் அப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பொது மக்களின் நலன் கருதி, அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் ஒப்பந்ததாரரிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா் தீரஜ் குமாா், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கோதண்டராமன், தலைமைப் பொறியாளா் சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் சேகா், கோட்டப் பொறியாளா் ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT