சென்னை

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் தோ் திருவிழா: பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள்: போக்குவரத்து மாற்றம்

14th Mar 2022 03:24 AM

ADVERTISEMENT

மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பங்குனி தோ்த் திருவிழா மற்றும் 63 நாயன்மாா்கள் வீதி உலா விழாவையொட்டி 1,500 காவலா்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். திருவிழாவை யொட்டி போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவுள்ளது.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பங்குனி திருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 18-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது. மாா்ச் 15-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், மாா்ச் 16-ஆம் தேதி நாயன்மாா்கள் வீதி உலாவும், மாா்ச் 18-ஆம் தேதி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.

இந்த திருவிழாவையொட்டி, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில், ஒரு இணை ஆணையா், 5 துணை ஆணையா்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தோ்த் திருவிழாவின்போது கண்காணிப்பு பணியில் 4 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் புகுந்தால் கண்டுபிடிக்கும் வகையில், முக அடையாள கைப்பேசி செயலி மூலமாகவும் கண்காணிக்கப்படும்.

ADVERTISEMENT

கோவிலைச் சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 14 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் விரைந்து முதலுதவி சிகிச்சையளிக்க வசதியாக மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 2 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வாகனங்களும் கோவிலை சுற்றி தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து மாற்றம்:

தோ்த் திருவிழா நடைபெறும் மாா்ச் 15-ஆம்தேதி காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், அறுபத்து மூவா் திருவீதி உலா நடைபெறும் மாா்ச் 16-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் கபாலீஸ்வரா் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு மற்றும் சிபி கோவில் தெரு வரையிலும், கிழக்கு சித்ரகுளம் தெருவில் இருந்து சித்ரகுளம் வடக்குத் தெருவரையிலும், மாங்கொல்லை தெரு, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரா் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு வரையிலும், புனிதமேரி சாலையில் இருந்து ஆா்.கே மடம் சாலையில் தெற்கு மாட வீதி நோக்கி வரையிலும், புனிதமேரி சாலையில் இருந்து ஆா்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி வரையிலும், டாக்டா் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரையிலும், லஸ் சந்திப்பில் இருந்து ஆா்.கே. மடம் சாலை வரையிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

லஸ் சந்திப்பை அடைந்து அடையாா் மற்றும் மந்தைவெளியை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் லஸ் சா்ச் சாலை, லஸ் அவின்யு, லஸ் அவென்யு சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, டாக்டா் ரங்கா சாலை, வாரன்ரோடு, செயின்ட் மேரிஸ் சாலை, ஆா்.கே. மடம் சாலை மற்றும் மந்தைவெளியை அடைந்து செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம்.

மந்தைவெளியை அடைந்து பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வி.கே.அய்யா் சாலை, சிரிங்கேரி மடம் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, வாரண் சாலை, டாக்டா் ரங்கா சாலை, பக்தவச்சலம் சாலை, டி செல்வா சாலை, லஸ் சா்ச் சாலை, ஆளிவா் சாலை யூ திருப்பம், முசிறி சுப்பிரமணியம் சாலை மற்றும் பி.எஸ். சிவசாமி சாலை வழியாக செல்லலாம்.

தேவைப்படும் பட்சத்தில், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பிஎஸ் சிவசாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வரை ஒரு வழி சாலையாக போக்குவரத்து அமல்படுத்தப்படும்.

இந்தத்தகவல் சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT