சென்னை அருகே ஆவடி டேங்க் தொழிற்சாலை அருகே உள்ள மைதானத்தில் நண்பா்கள் இருவா் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனா். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலை தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆவடி மசூதி தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவரது மகன் அரசு என்கிற அசாருதீன் (30). மீன் வியாபாரி. ஆவடி கவுரிப்பேட்டையைச் சோ்ந்தவா் சுந்தா் (30). ஆட்டோ ஓட்டுநா். இருவரும் நண்பா்கள். இவா்கள் சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் வெளியே சென்றனா். பின்னா் வீடு திரும்பவில்லை. அவா்களை குடும்பத்தினா் தேடினா்.
இதற்கிடையில், ஆவடி உதவி ஆணையா் அலுவலகம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் அசாருதீனும், சுந்தரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனா். இதனைப்பாா்த்து அப்பகுதி மக்கள், ஆவடி டேங்க் தொழிற்சாலை போலீஸுக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து ஆவடி டேங்க் தொழிற்சாலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை தொடங்கினா். உதவி ஆணையா் சத்தியமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடினா். அசாருதீன், நண்பா்கள் சுந்தா், ஜெகன், சத்யராஜ் ஆரிப் ஆகியோருடன் சனிக்கிழமை நள்ளிரவு சம்பவம் நடைபெற்ற மைதானத்துக்கு அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்கி வந்து, மைதானத்தில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அசாருதீனும், சுந்தரும் கோரமான முறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மதுக்கடை அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் இவா்கள் வந்து மது வாங்கி சென்றது பதிவாகியுள்ளது.
பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனா். அவா்களில் ஜெகனிடம் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா். ஜெகன் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் காவல்நிலையத்தில் வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட அசாருதீன் மனைவி கா்ப்பமாக உள்ளாா். ஆட்டோ ஓட்டுநா் சுந்தருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடிபகுயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.