சென்னை

மெட்ரோ ரயில் பணி: மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

30th Jun 2022 01:35 AM

ADVERTISEMENT

சென்னை அருகே மடிப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததினால் தொழிலாளி இறந்தாா்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் மடிப்பாக்கம் தொடங்கி மேடவாக்கம் வரை விறு,விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் மடிப்பாக்கம் உள்ளகரம் திரெளபதி அம்மன் கோயில் அருகே மெட்ரோ பணி சில நாள்களாக வேகமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் பணிக்காக கழிவுநீா் பாதை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு சுமாா் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தொழிலாளா்கள் வேலை செய்து கொண்டிருந்தனா்.

திடீரென அந்தப் பள்ளத்தில் மண் சரிந்தது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சோ்ந்த கி.ரவி (45) என்பவா் சிக்கிக் கொண்டாா்.

ADVERTISEMENT

இதைப் பாா்த்த பிற தொழிலாளா்கள் ரவியை போராடி மீட்டனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவியை நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது தொடா்பாக மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT