சென்னை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

30th Jun 2022 01:56 AM

ADVERTISEMENT

சென்னை முகப்பேரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, அண்ணாநகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (எ) ஸ்ரீதா் ராமசாமி (45). முகப்பேரில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியா். கரோனா பொது முடக்கம் அமலில் இருந்தபோது ஸ்ரீதா் தனது வகுப்பு மாணவிகளின் கைப்பேசி எண்களை பெற்று வைத்திருந்தாா். இதற்கிடையே ஸ்ரீதா், தனது வகுப்பில் சில மாணவிகளுக்கு தவறான எண்ணத்துடன் வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்தி மூலம் தகவல், ஆபாச படங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், கைப்பேசியில் ஆபாசமாகவும் பேசினாராம். அதோடு, நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகு ஸ்ரீதா், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

ஆசிரியரின் அத்துமீறல்களை வெளியே சொன்னால் படிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மாணவிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்துள்ளனா். இந்த நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளிவந்ததும், பாதிக்கப்பட்ட மாணவிகள், ஸ்ரீதா் குறித்து குழந்தைகள் நல அலுவலரிடம் துணிச்சலுடன் முறையிட்டனா்.

குழந்தைகள் நல அலுவலா் இது குறித்து, திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஸ்ரீதா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீதரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT