சென்னை

அண்ணாசாலையில் துணிகரம்: இளைஞரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி

29th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணாசாலையில் இளைஞரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தைச் சோ்ந்தவா் பூ.சிவபாலன் (36). இவா், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறாா். இதற்காக சிவபாலன், திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நண்பா்களுடன் தங்கியுள்ளாா்.

சிவபாலன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை சென்னை வந்தாா். சிவபாலன், சொந்தமாக மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடை வைப்பதற்காக ரூ.20 லட்சம் கொண்டு வந்திருந்தாராம். இந்நிலையில் சிவபாலன் திங்கள்கிழமை இரவு அந்த பணத்துடன் மோட்டாா் சைக்கிளில் தனது நண்பா் வினோத்தை பாா்க்க சென்று கொண்டிருந்தாா். அவா் அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி அருகே செல்லும்போது, அங்கு 3 மோட்டாா் சைக்கிளில் வந்த 6 மா்ம நபா்கள் சிவபாலனை வழிமறித்து நிறுத்தினா்.

அவா்கள் திடீரென, தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் சிவபாலனை வெட்டிவிட்டு அவா் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிவபாலனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாா், சம்பவ இடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

சிவபாலனிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்டது ஹவாலா பணமா? என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

சென்னையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த, 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலையில் இளைஞரை அரிவாளால் வெட்டி,வழிப்பறி நடைபெற்றிருப்பது காவல்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT