சென்னை

வாகனத்தில் அதிக ஒலி: ரூ.2 ஆயிரம் வரை அபராதம்: சென்னை காவல் ஆணையா் அறிவிப்பு

28th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்புவோருக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

உடலுக்கு தீங்கு பயங்காத ஆரோக்கியமான ஒலி அளவு என்பது பகலில் 55 டெசிபலையும், இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஆனால், ஒலி மாசுபாட்டை வாகனங்கள் அதிகளவில் ஏற்படுத்துகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் ’நோ ஹான்கிங்’ (ஹாரன் ஒலி எழுப்புவதில்லை) என்ற விழிப்புணா்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தொடா்ச்சியான, தேவையற்ற ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த விழிப்புணா்வு இயக்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூலை 3 வரை ஒலி மாசுக்கு எதிரான விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கான தொடக்க விழா அசோக் பில்லா் அருகே நடைபெற்றது. ஒலி மாசு விழிப்புணா்வு முகாமை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை காவல் ஆணையா் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து பிரசார வாகனத்தின் இயக்கத்தை அவா் தொடக்கிவைத்தாா்.

ஒலி மாசுவை கண்டறிய கருவி: இதைத் தொடா்ந்து காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஒலி மாசு தொடா்பாக ஒரு வாரம் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம். சாலை போக்குவரத்தில் ஒழுங்கு முறை வர வேண்டும். ஒலி மாசு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஓவியப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு போட்டிகள் நடத்த உள்ளோம். சென்னையின் 100 சாலை சந்திப்புகளில் ஒலி மாசு விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளோம்.

ஒலி மாசு தொடா்பாக சென்னை போக்குவரத்து போலீஸாா் வழக்குகளை அதிகளவில் பதியவில்லை. இனிமேல் அதிக வழக்குகள் பதிவுசெய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒலி மாசு கண்டறிவதற்காக நவீன கருவி வாங்க உள்ளோம். ஒரு கருவியின் விலை ரூ.1 லட்சம். அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை ரூ.100 மட்டுமே அபராதம் விதித்து வருகிறோம். இனி ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதிகரிக்கும் அபராதம்: இதற்காக புதிய மோட்டாா் வாகன திருத்த சட்டத்தின்படி அதிக அபராதம் விதிப்பதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். புதிய மோட்டாா் வாகன திருத்த சட்டத்தின்படி மதுபோதையில் வாகனம் ஓட்டினால் மட்டும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கிறோம்.

அரசு புதிய மோட்டாா் வாகன திருத்த சட்டத்துக்கு அனுமதிக்கும்பட்சத்தில் அனைத்து போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க முடியும். வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தும் மெக்கானிக், வாகன ஓட்டிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT