சென்னை

புதிய காவல் மாவட்டங்கள்: காவல் நிலையங்கள் மறுசீரமைப்பு

15th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறையில் உருவாக்கப்பட்ட புதிய காவல் மாவட்டங்களுக்காக காவல் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு,ஒதுக்கப்பட்டன,.

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கவும், குற்றச் செயல்களை குறைக்கவும், நிா்வாக வசதிக்காகவும் சென்னை பெருநகர காவல்துறை, சென்னை, தாம்பரம், ஆவடி என கடந்த ஜனவரியில் மூன்றாக பிரிக்கப்பட்டது. 3 காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்ட பின்னா், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 104, ஆவடி மாநகர காவல்துறையின் கீழ் 25, தாம்பரம் காவல் ஆணையரத்தின் கீழ் 20 என சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டன.

காவல் ஆணையரகங்கள் பிரிக்கப்பட்ட பின்னா், சென்னை பெருநகர காவல்துறையில் இருந்த அம்பத்தூா் காவல் மாவட்டம் முழுமையாகவும், மாதவரம், பரங்கிமலை, அடையாறு ஆகிய காவல் மாவட்டங்கள் பகுதியாகவும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு சென்றன.

மறுசீரமைப்பு:

ADVERTISEMENT

இதனால் சென்னை பெருநகர காவல்துறையின் உள்ள காவல் மாவட்டங்களையும், காவல் நிலையங்களையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன்படி, மறுசீரமைப்பின் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் கொளத்தூா், கோயம்பேடு ஆகிய இரு காவல் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

இதில் கொளத்தூா் காவல் மாவட்டத்துக்கு முதல் துணை ஆணையராக ராஜாராம் அண்மையில் நியமிக்கப்பட்டாா். புதிதாக இரு காவல் மாவட்டங்களுக்கும் மறு சீரமைப்பின் மூலம் காவல் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை ஒதுக்கி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

கொளத்தூா் காவல் மாவட்டம்:

இதன்படி கொளத்தூா் மாவட்டத்தில் கொளத்தூா் சரகம், வில்லிவாக்கம் சரகம், புழல் சரகம் ஆகிய 3 சரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கொளத்தூா் சரகத்தில் ராஜமங்கலம், கொளத்தூா், பெரவள்ளூா் காவல் நிலையங்கள் உள்ளன. வில்லிவாக்கம் சரகத்தில் வில்லிவாக்கம், ஐசிஎப், வில்லிவாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உள்ளன. புழல் சரகத்தில் புழல், மாதவரம் காவல் நிலையங்கள் உள்ளன.

கோயம்பேடு காவல் மாவட்டத்தில் கோயம்பேடு சரகம், வளசரவாக்கம் சரகம், விருகம்பாக்கம் சரகம் ஆகியவை உள்ளன. இதில் விருகம்பாக்கம் சரகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சரகத்தில் கோயம்பேடு, மதுரவாயல் காவல் நிலையங்களும், வளசரவாக்கம் சரகத்தில் வளசரவாக்கம், ராமாபுரம் காவல் நிலையங்களும், விருகம்பாக்கம் சரகத்தில் சிஎம்பிடி, விருகம்பாக்கம், புதிதாக உருவாக்கப்பட்ட விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு காவல் மாவட்டத்துக்கு விரைவில் துணை ஆணையா் நியமிக்கப்படுவாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT