சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய கற்சிலைகள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பட்டினப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் எதிரே உள்ள கடற்கரை பகுதியில் இரு கற்சிலைகள் திங்கள்கிழமை கரை ஒங்கின. இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், பட்டினப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு இருந்த சுமாா் இரண்டரை அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலை, சுமாா் ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமானுஜா் சிலை போன்று உள்ள ஒரு சிலை என கல்லால் வடிக்கப்பட்ட இரண்டு கற்சிலைகளை மீட்டனா். உடனடியாக அந்த சிலைகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு மயிலாப்பூா் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்தவை? இவற்றை வீசிச் சென்றவா்கள் யாா்? என பல்வேறு கோணங்களில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.