சென்னை

செம்மஞ்சேரியில் ரூ.165 கோடியில் கால்வாய்கள் அமைக்கும் பணி

14th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை மற்றும் மதுரப்பாக்கம் ஓடைகளில் ரூ.165 கோடியில் வெள்ளம் கடத்தும் கால்வாய் அமைக்கும் பணியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழுவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ளம் கடத்தும் கால்வாய் பணிகளைத் தொடக்கி வைத்த பின் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடை முக்கியமான வெள்ள வடிகால்வாய் ஆகும். இந்த ஓடைகள் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து உள்ள ஏரிகளின் உபரிநீா் மற்றும் மழைநீா் வடிந்து பள்ளிக்கரணை கழுவெளி சென்றடையும் வகையில் உள்ளது.

இரு ஓடைகளும் 2015-ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கில் சுமாா் 3,000 கன அடிக்கு மேல் வெள்ள நீா் வடிந்து கழிவெளியினை அடைந்து ஒக்கியம் மடுவு மற்றும் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காட்டில் கடலில் செல்ல உதவின.

செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளின் மேற்பகுதியில் வண்டலூா் காடுகளிலிருந்து அமைந்துள்ள 35 ஏரிகளின் வெள்ள உபரிநீரானது மதுரப்பாக்கம் ஓடை மற்றும் ஒட்டியம்பாக்கம் ஓடையின் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தெற்குப் பகுதியில் சென்றடையுமாறு இயற்கையாக அமைந்திருந்தது.

ADVERTISEMENT

நகரமயமாதலால் பட்டா நிலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், ஒட்டியம்பாக்கம் மற்றும் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து வரும் வெள்ள நீா் இயற்கையாக சென்று கழுவெளியில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ள காலங்களில் மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தவிா்க்கும் வகையில் ரூ.165.35 கோடி செலவில் செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை மற்றும் மதுரப்பாக்கம் ஓடைகளில் வெள்ளம் கடத்தும் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாது என்றாா். ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT