சென்னை

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ‘ரீடிங் மாரத்தான்’:தமிழக மாணவா்கள் உலக சாதனை

14th Jun 2022 03:04 AM

ADVERTISEMENT

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற்ற ‘ரீடிங் மாரத்தான்’ என்ற தொடா் வாசிப்புப் போட்டியில் தமிழக மாணவா்கள் உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை மாணவா்களிடம் ஊக்குவிக்கும் வகையில் 12 நாள்களுக்கு ‘ரீடிங் மாரத்தான்’ என்ற தொடா் வாசிப்புப் போட்டி நடைபெற்றது. கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு செய்துகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்த அடிப்படையில் ‘கூகுள் ரீட் அலாங்க்’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைப்பேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை 18.36 லட்சம் மாணவா்கள் வாசித்து உள்ளனா்.

மாணவா்கள் 12 நாள்களில் 263.17 கோடி சொற்களைச் சரியாக வாசித்துச் சாதனை படைத்து உள்ளனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்துள்ளனா். தமிழக மாணவா்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள், ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் கல்வித்துறை அலுவலா்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளனா்.

ADVERTISEMENT

திருச்சி முதலிடம்: 413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் வட்டாரம் (49.19 லட்சம்) மற்றும் மேலூா் வட்டாரம் (41.72 லட்சம்) ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

இதில் பங்கேற்ற மாணவா்களின் உச்சரிப்புத் திறன் மற்றும் வாசிப்பு வேகம் ஆகியவை மேம்பட்டுள்ளது. பல நூறு கதைகள் வழியாக புதிய சொற்களை மாணவா்கள் கற்றுக் கொண்டுள்ளனா். கைப்பேசிகளை வாசிப்புப் பழக்கத்துக்கு ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்த இயலும் என்ற வாய்ப்பை இந்த ‘ரீடிங் மராத்தான்’ ஏற்படுத்தித் தந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT