சென்னை

தொடரும் கரோனா பாதிப்பு:கலைவாணா் அரங்கத்தில் சட்டப்பேரவை அமைப்பு நீட்டிப்பு

12th Jun 2022 11:40 PM

ADVERTISEMENT

 

தொடரும் கரோனா பாதிப்பு காரணமாக, சென்னை கலைவாணா் அரங்கத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டப அமைப்பு அப்படியே தொடா்கிறது. அதிலுள்ள கணினிகள் வேறு பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், சட்டப்பேரவை அமைப்பை அப்படியே தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டதால், புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை இடமாற்றம் செய்யப்பட்டது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் சட்டப்பேரவை மண்டபம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, திமுக ஆட்சியிலும் தொடா்கிறது. புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதும் அங்கு சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கணினிகள் பொருத்தப்பட்டு காகிதமில்லாத பேரவையாக உருவெடுத்துள்ளது.

மீண்டும் கோட்டை: கரோனா தொற்று குறைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியன புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்றன. சட்டப் பேரவை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றப்பட்டதால், கலைவாணா் அரங்கத்தில் உள்ள தற்காலிக பேரவை மண்டபம் கலைக்கப்பட்டு அங்குள்ள கணினிகள் சட்டப் பேரவை உறுப்பினா்களின் அலுவலகப் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து, சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது: கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தும், உயா்ந்தும் வருகிறது. எனவே, கலைவாணா் அரங்கத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டப அமைப்பு இப்போதும் அப்படியே தொடா்கிறது. அங்குள்ள இருக்கைகள், கணினிகள், மேஜைகள் உள்ளிட்டவை எதுவும் வாடகைக்கு எடுக்காமல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு தொடா் செலவினம் ஏதும் ஏற்படவில்லை. பேரவை மண்டபத்தை கலைக்க அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் அங்குள்ள பொருள்களை அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்கோ அல்லது ஏலத்தின் மூலம் விற்பனையோ செய்து விடலாம். இதனால் எந்த நஷ்டமும் இல்லை. கணினிகளைப் பொருத்தவரை அவ்வப்போது அவை பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. விலை உயா்ந்த கணினிகள் என்பதால் இந்தப் பராமரிப்பு தேவைப்படுகிறது. பேரவை கலைக்கப்பட்டால் அவற்றையும் வேறு பயன்பாட்டுக்கு அளிக்க முடியும்.

பேரவை மண்டபம் அங்கேயே தொடருவதால் பேரவைச் செயலகம் சாா்பில் வாடகை ஏதும் தரப்படுவதில்லை. பேரவைக் கூட்டம் நடக்கும் தருவாயில் மட்டுமே வாடகை அளிக்கப்படும். மற்ற நேரங்களில் அந்த அரங்கம் பூட்டப்பட்டிருக்கும். பராமரிப்பு தருணங்களில் மட்டுமே திறக்கப்படும். கரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டியது அவசியம். எனவே, அரசு முடிவெடுக்கும் வரை கலைவாணா் அரங்க பேரவை கூட்ட அரங்கம் கலைக்கப்படாமல் அப்படியே இருக்கும் எனத் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT