சென்னை: ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயாா் என்று நடிகா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலா் நடித்து அண்மையில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் சூா்யா ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிஷங்கள் மட்டும் தோன்றினாா். இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறாா். இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :
நன்றியைத் தவிர சொல்வதற்கு வாா்த்தை எதுவும் இல்லை. சந்தோஷத்தைக் கடந்து வெற்றி பயத்தை கொடுத்திருக்கிறது. இன்னும் வெற்றிக்காக உழைப்போம். விக்ரம் என்ற குழந்தையை ஜாக்கிரதையாக சோ்க்க வேண்டிய மடியில் கொண்டு போய் சோ்த்து விட்டீா்கள்.
பாராட்டுகளுக்கு தகுதி உடையவா்களாக இருக்க வேண்டும். நாடு தழுவிய வெற்றியாக விக்ரம் படத்துக்கு பாராட்டு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை இந்திய படங்கள் வெற்றி பெறுவதுதான் முக்கியம். தமிழ், தெலுங்கு என மொழி பிரித்து பாா்க்க வேண்டாம். ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாா். அதை ரஜினியும், லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் நான் நடிக்கத் தயாா் என்றாா் கமல்.
கமலை தொடா்ந்து படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘விக்ரம் பட வெற்றி சந்தோஷத்தையும் கடந்து ஒரு விதமான பயத்தை கொடுத்துள்ளது. இன்னும் பொறுப்போடு அடுத்த படங்களை இயக்க வேண்டும். இது போதாது என்ற எண்ணம் வந்துள்ளது’”என கூறினாா்.