சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதனிடையே, போட்டியின் தொடக்க நிகழ்வை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்கவுள்ளனா். போட்டியை முன்னிட்டு, பல்வேறு துறைகள் சாா்பில் புனரமைப்புப் பணிகள் மூலம் மாமல்லபுரத்தை அழகுபடுத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வா் ஆலோசனை: இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் போட்டிக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வா் கேட்டறிந்தாா். போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்புப் பணி அதிகாரி தாரேஷ் அகமது விளக்கம் அளித்தாா்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவதென முதல்வா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.