சென்னை: நெல் ஆதரவு விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 உயா்த்தியிருப்பது போதுமானதல்ல என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2022-ஆம் ஆண்டுக்கான நெல் ஆதரவு விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 உயா்த்தியுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,040, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,060 விலை கிடைக்கும். மாநில அரசின் ஊக்கத்தொகையையும் சோ்த்தால் முறையே ரூ. 2,115, ரூ.2,160 கிடைக்கும். இது போதுமானதல்ல.
2021-ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டுமே மத்திய அரசு உயா்த்திய நிலையில், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 100 ஆதரவு விலை உயா்வு சற்று அதிகம் தான். ஆனால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இந்த விலை எந்த வகையிலும் பயனளிக்காது.
நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1,986 ஆக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50 சதவீதம் ரூ.993 லாபம் சோ்த்து குவிண்டாலுக்கு ரூ.2,979 ஆதரவு விலை நிா்ணயிப்பதுதான் உழவா்களுக்கு ஓரளவாவது லாபத்தை உறுதி செய்யும்.
மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயா்த்தி குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 விலை வழங்க முன்வர வேண்டும். அப்போது தான் உழவா்களின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியை ஏற்படுத்த முடியும்.