சென்னை

கால்நடை தோல் நோய்களுக்கு தமிழகத்தில் உயர் சிகிச்சை

10th Jun 2022 05:20 AM

ADVERTISEMENT

 

சென்னை: கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்களுக்கு நவீன உயர் சிகிச்சையளிக்கும் மருத்துவக் கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கால்நடை தோல் நோய் சிகிச்சை குறித்த 3 நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசியதாவது: கால்நடை நலனுக்காக சிறப்பு சுகாதார முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதுடன் கிராமப்புறங்களின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும்.
மற்றொருபுறம் கால்நடை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவத்தில் உயர் சிகிச்சைகளை வழங்குவதிலும், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அதிநவீன சிகிச்சை வசதிகள் இங்கு உள்ளன. அதேபோன்று, தமிழகம் தோல் பொருள்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. எனினும், மாடுகளின் தோல்களில் சிறு வெடிப்புகள், தழும்புகள் இருந்தாலும் சந்தைகளில் அதன் மதிப்பு குறைகிறது. மேலும், பூச்சிக்கடி மற்றும் உண்ணியால் ஏற்படும் பல்வேறு வித நோய்களால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றன.  இதன் தாக்கத்தை தோல் பொருள்களின் உற்பத்தி, ஏற்றுமதியில் உணர முடிகிறது. எனவே, கால்நடைகளின் தோல் நோய் பாதிப்புகளுக்கு உரிய  மருத்துவச் சிகிச்சைகள் வழங்குவது இன்றியமையாதது.
அதைக் கருத்தில் கொண்டு, கால்நடைக்காக தோல் மருத்துவப் பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. மேலும், தோல் மருத்துவப் பிரிவில் உள்ள அதிநவீன சிகிச்சைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறைகள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கால்நடை மருத்துவக்கழக தலைவர் உமேஷ் சந்திர சர்மா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.என்.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT