சென்னை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை

10th Jun 2022 05:38 AM

ADVERTISEMENT


சென்னை:  சென்னை அரும்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அரும்பாக்கம் ஜானகிராம் காலனி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி (68), மனைவி பானுமதி (59), மகன் கண்ணபிரான் (39). இவர்களின் வீடு வியாழக்கிழமை பூட்டியே கிடந்துள்ளது. கண்ணபிரான் தனது நண்பரான வடபழனி சஞ்சீவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குரல் பதிவை ஏற்கெனவே அனுப்பியுள்ளார்.
அதில், தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தாராம். அந்த குரல் பதிவைக் கேட்ட சஞ்சீவ் உடனே கோபால்சாமி வீட்டுக்கு வந்து, கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு கோபால்சாமி, கண்ணபிரான், பானுமதி ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த அரும்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 3 பேர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல்கள்:
கண்ணபிரானுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணினி தொடர்பான மொத்த வியாபாரம் செய்யும் கண்ணபிரான், வித்யா இடையே அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் கண்ணபிரான், விரக்தியுடன் இருந்து வந்ததும், கோபால்சாமி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உணவகம் நடத்தி கடன் சுமையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. 
இதற்கிடையே போலீஸார் கோபால்சாமி வீட்டில் 6 பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில் கோபால்சாமி, கடன் சுமை அதிகரித்ததாலும், வீட்டை விற்கும் சூழல் ஏற்பட்டதாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT