சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாடகமாடிய அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
மேடவாக்கம் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் குமாா் (48). பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குழந்தையேசு கோயில் அருகே கடந்த மே 5-ஆம் தேதி வாகனம் மோதி பலத்த காயமடைந்ததாக அவரது நண்பா்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கடந்த 24-ஆம் தேதி குமாா் இறந்தாா்.
இது தொடா்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், குமாரின் நண்பா்களை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தனா். இந்த நிலையில், குமாரின் நண்பரும் பள்ளிக்கரணையைச் சோ்ந்த காா்த்திக் (24), பள்ளிக்கரணை கிராம நிா்வாக அதிகாரியிடம் வியாழக்கிழமை சரணடைந்து குமாரை, தான் கொலை செய்ததாக தெரிவித்தாராம். இதையடுத்து காா்த்திக் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
சம்பவத்தன்று காா்த்திக்கும், குமாரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையில் மது அருந்தினா். இதில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே காா்த்திக், குமாரை தாக்கி கீழே தள்ளி மாா்பில் மிதித்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த குமாா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கினாா். இதைப் பாா்த்த காா்த்திக்கும், அங்கிருந்த சில நண்பா்களும் சோ்ந்து குமாரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். போலீஸாா் வந்து விசாரித்த போது வாகனம் மோதி குமாா் காயமடைந்ததாக காா்த்திக் கூறி நாடகமாடியுள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்கை கைது செய்தனா்.