சென்னை: அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளை மூடக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் புதன்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கைகள்:
ஓ.பன்னீா்செல்வம்: அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளை மூடுவதாக அரசு தெரிவித்துள்ளதைப் பாா்க்கும்போது, அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம் என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கிா எனத் தெரியவில்லை. கல்வியில் அரசியல் காழ்ப்புணா்ச்சியை புகுத்துவது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடா்ந்து நடத்தி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.
ஜி.கே.வாசன்: அரசுப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளை மூடுவது தனியாா் பள்ளிகளுக்குத்தான் சாதகமாக இருக்குமே தவிர, ஏழை மக்களுக்கு உதவாது. அதனால், தமிழக அரசு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடா்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.