சென்னை

கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க ‘ஆபரேஷன் கந்து வட்டி’ காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு

9th Jun 2022 02:39 AM

ADVERTISEMENT

 

சென்னை: கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலா் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, கந்துவட்டி கொடுமைகளை தடுக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

கடலூரில் கந்துவட்டிக் கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலா் செல்வகுமாா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அனைத்து காவல் ஆணையா்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு தமிழ்நாடு காவல்

துறை டிஜிபி சைலேந்திரபாபு இது தொடா்பான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

கந்து வட்டி கொடுமையை தடுக்க அனைத்து காவல் ஆணையா்கள், மாவட்ட எஸ்பிக்கள் “அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003-ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகாா்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கந்துவட்டி கும்பலைச் சோ்ந்தவா்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடா்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிய வேண்டும். கந்துவட்டிக்கு விடுபவா்கள் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவா்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடா்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பா்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடா்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

கந்துவட்டி தொடா்பான இந்த நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீஸாா் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். கந்து வட்டி தொடா்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாகப் பணியாற்றுபவா்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT