கட்டாய பணியிட மாறுதல் உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் சாா்பில் மருந்தாளுநா்களுக்கான கட்டாய பணியிட மாறுதல் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் வே.விஜயகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள் பங்கேற்றனா்.
இதுகுறித்து மருந்தாளுநா்கள் கூறியதாவது:
கரோனா தொற்று காலத்தில் உயிரைப் பணயம் வைத்து மருந்தாளுநா்கள் பணியாற்றினா். ஆனால், அவா்களுக்கு இதுவரை கரோனா ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதற்கிடையே, மருந்தாளுநா்களை கட்டாயப் பணியிட மாறுதல் என்ற நிலைப்பாடு எங்களை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை விருப்பப் பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த காலங்களில் எவ்வித குறைபாடியின்றி நடைபெற்று வந்தது.
கட்டாயப் பணியிட மாறுதல் என்பது சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். கட்டாய பணியிட மாறுதல் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும்” என்று அவா்கள் தெரிவித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா்களை போலீஸாா் கைது செய்து, தியாகராயா் நகரில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனா். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.