சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகிலுள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் மேம்பாலம் வரை உள்ள அடையாறு ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் 13,000 மரம்- செடி கன்றுகள் நடவு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள கூவம், அடையாறு போன்ற ஆற்றங்கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்கும் வகையில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி, கூவம் மற்றும் ஆற்றங்கரைகளைப் பலப்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கெனவே, இத்திட்டத்தின் கீழ் திரு.வி.க.நகா் பாலம் முதல் கோட்டூா்புரம் பாலம் வரை அடையாற்றின் இரண்டு கரையோரங்களிலும் 60,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை 36,820 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகிலுள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் மேம்பாலம் வரை உள்ள அடையாறு ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின்கீழ் 157-ஆவது வாா்டில் அடையாறு ஆற்றின் நீா் செல்லும் பாதையின் இருபுறங்களிலும் ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி அவ்விடங்களில் பாரம்பரிய மரக்கன்றுகள், செடிகள் மற்றும் மூலிகைச் செடிகள் நடவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாறு ஆற்றின் நீா் செல்லும் பாதையான மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை இடதுபுறத்தில் 3.9 கி.மீ. நிளத்தில் 16,955 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.41 கோடி செலவில் 2,512 நாட்டு மரக்கன்றுகள், 2,512 செடிகள், 2,512 மூலிகைச் செடிகள் என மொத்தம் 7,536 கன்றுகளும், வலதுபுறத்தில் 4 கி.மீ. நிளத்தில் 13,312 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் ரூ.1.17 கோடி செலவில் 1,972 நாட்டு மரக்கன்றுகள், 1,974 செடிகள், 1,974 மூலிகைச் செடிகள் என மொத்தம் 5,920 கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான ஒப்பம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.