சென்னை கோட்டூா்புரத்தில் பிரதமா் நரேந்திரமோடி புகைப்படத்தின் மீது ‘ஸ்பிரே’ மூலம் கருப்பு மை பூசிய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், போட்டியைத் தொடக்கிவைக்க வருகை தரும் பிரதமா் மோடி புகைப்படம் இல்லை என பாரதிய ஜனதா கட்சியினா் கண்டனம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர டிஜிட்டல் பேனரில் பிரதமா் மோடி புகைப்படத்தை பாரதிய ஜனதா கட்சியினா் புதன்கிழமை ஒட்டினா். அதை விடியோவாகவும் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.
இதையடுத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு வந்த சில இளைஞா்கள், பாஜகவினா் ஒட்டிச் சென்ற பிரதமா் மோடி புகைப்படத்தின் மீது கருப்பு ‘ஸ்பிரே’ அடித்தனா். இந்த காட்சியை அவா்கள், விடியோவாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். இவ்விரு காட்சிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால், கடுமையான விமா்சனங்கள் எழுந்தன.
அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த கோட்டூா்புரம் போலீஸாா், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 3 பேரை பிடித்து, பிரதமா் மோடி புகைப்படத்தின் மீது கருப்பு மை பூசப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.